ஆராய்வு ஆற்றுகையாக “தமிழர் மத்தியில் இசை கிளைவிட்ட முறைமை”. யாழ்/ கைலாசபதி கலைஅரங்கில் லேடி ராமனாதன் நினைவுப் பேருரை -பேராசிரியர் சி. மௌனகுரு
வருடாவருடம் பட்டமளிப்பு விழாவினை அடுத்து நினைவுப்பேருரைகளை நிகழ்த்துவது யாழ் பல்கலைக்கழக வழமை. லீலாவதி இராமநாதன் நினைவுப்பேருரையினை இம்மாதம் 11 ஆம் திகதி (11.6.2018) நிகழ்த்த யாழ் பல்கலைக்கழகம் என்னை அழைத்திருந்தது. தமிழர் மத்தியில் தமிழிசை கிளைவிட்ட முறைமை எனும் தலைப்பில் உரையாற்றுவதுடன் எனது ஆராய்வின் முடிவுகளை உள்ளடக்கிய ஒரு ஆற்றுகையாகவும் அதனைச் செய்யலாம் என நான் கூறியபோது, ‘அதனை மரபு ஏற்குமா? அது நினைவுப் பேருரைதானே?’ என கூறிச் சிலர் தயக்கம் காட்டினர்.
நான் பேரா.புஸ்பரத்தினத்திடமும் உப வேந்தர் விக்கினேஸ்வரனிடமும், கலைப்பீடாதிபதி கலாநிதி சுதர்ஸனிடமும் ஆராய்ச்சியை எப்படி ஓர் ஆற்றுகையாகவும் வழங்கலாம் என விளக்கியபோது அவர்கள் அதனை வரவேற்றனர். நுண்கலைகளான ஓவியம், சிற்பம், ஆகியவற்றிலும் ஆற்றுகைக்கலைகளான நடனம், இசை, நாடகம், ஆகிவற்றிலும் ஆழமாக ஆராய்ந்து கண்டுபிடிப்புகளை செய்யும் கலைஞர்கள், ஆய்வாளர்கள் எவ்வாறு தம் முடிவுகளை, ஆராய்வை வெளிப்படுத்தலாம்?
ஆராய்ச்சி என்றால் எழுத்துருவையும் அதனைச் சமர்ப்பித்து வாசிப்பதையுமே பலர் எண்ணுகிறார்கள். இந்த வட்டத்துள் நின்று வெளிவர மரபு வேலி எம்மைத்தடுக்கிறது. வித்தியாசம் வித்தியாசமாக இவ் ஆய்வுரைகளை வழங்கமுடியாதா? என்று சிந்தித்ததன் விளைவே ஆராய்ச்சி ஆற்றுகையாக என்று பெயரிடப்பட்ட உரையும் ஆற்றுகையும் கலந்த இந்த நினைவுப்பேருரை. ஏற்கனவே இதனைநான் சிறிய அளவில் செய்திருந்தேன்.
தொடர் தேடுதல்களினாலும் ஆய்வுகளினாலும் கிடைத்த தகவல்கள் கொண்டு முந்திய விடயங்களை புதுக்கியும் மாற்றியும்.செம்மைப்படுத்தியும் அளித்த நினைவுப்பேருரைதான் இது. இதனைத் தயாரிக்க இம்முறை வழக்கத்தை விட மிகச்சிரமப்பட்டேன். ஒன்றன்மேல் ஒன்றாகத் தடைகள்இ தடைகள். இயற்கைத் தடைகளும் செயற்கைத்தடைகளும் வந்தன. ஆயினும் அவற்றை என் அன்புக்கும் நம்பிக்கைக்கும் பாசத்திற்குமுரிய மாணவர் துணையுடன் கடந்தேன். இது எனக்குப் பழகிப்போச்சு. அச்சிரமத்தையும் அதன் பின்னணிகளியும் பதிய வேண்டும். பதிவதும் அவசியம். அவை நாம் இங்கு தீவிரமாகச் செயற்பட எதிர்கொள்ளும் பல சவால்களைப்புரிந்துகொள்ள உங்களுக்கு உதவும்.
இவ்வுரை மூன்று பகுதிகளை உள்ளடக்கி இருந்தது. முதல் பகுதி, தமிழர் மத்தியில் இசை வளர்ந்த வரலாறு பற்றியதாகும். இரண்டாம் பகுதி, இந்த நீண்டவரலாற்றுப்பின்னணியில் தமிழ்ச்சினிமா உருவான வரலாறும் அதன் பின்னணிகளும் பற்றியதாகும். மூன்றாம் பகுதி, அந்த ஆய்வுச் சுருக்கத்தை ஆற்றுகையாக அளிப்பதாகும்.
எனது உரை மூன்று செயற்பாடுகளை ஒரே நேரத்தில் உள்ளடக்கியிருந்தது. ஒன்று உரை, இரண்டு மல்டிமீடியாவில் பவர்பொயின்ரில் ஆற்றுகை விளக்கமும் பாடப்படும் பாடல்களும் காட்சியாக, மூன்று மேடையில் பக்க வாத்தியக்கலைஞர்களான தபேலா இசைப்போர், மிருதங்கம் இசைப்போர் வயலின் இசைப்போர், உடுக்கு இசைப்போர் ஹார்மோனியம் இசைப்போர் அமர்ந்திருந்து பின்னணி இசைக்க ஆற்றுகையளர்கள் பாடி ஆடி நடித்து காட்சிகளை ஆற்றுகைகள் மூலம் தருதல். உரை, மல்டிமீடியா, ஆற்றுகை என மூன்று விடயங்களை ஏக காலத்தில் செய்தது எனது நினைவுப்பேருரை.
இவ்வண்ணம் புதிய முறையில் நினைவுப்பேருரை நிகழ்த்த அனுமதி தந்த கல்விக்குழுவுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள். பின் வரும் விடயங்கல் அங்கு நடந்தேறின.
- மரபுப்படி பல்கலைக்கழக மரபு உடை அணிந்து நினைவுப்பேருரை நிகழ்த்துபவரும் உபவேந்தரும் கலைப்பீடாதிபதியும் அழைத்துச் செல்லப்பட்டனர்
- நினைவுப்பேருரை நிகழ்த்துபவரை உப வேந்தர் சபைக்கு அறிமுகம் செய்து வைத்தார்
- நினைவுப்பேருரை ஆற்றுகையை உள்ளடக்கி நிகழ்த்தப்பட்டது
- உப வேந்தர் நினைவுப்பேருரை நிகழ்த்தியவரைக் கௌரவித்தார்
- கலைப்பீடாதிபதி நன்றியுரை கூறினார்
- பங்குகொண்ட மாணவர்களுடன் நின்று அனைவரும் படமெடுத்துக்கொண்டனர்
- மூதவை மண்டபத்தில் அனைவருக்குமான விருந்துபசாரம் நட்த்தப்பட்டது
நினைவுப்பேருரைக்கு யாழ்பல்கலைக்கழக உப வேந்தர் தலைமை தாங்கினார். முன்னாள் யாழ் பல்கலைக்கழக உப வேந்தர்களான பேராசிரியர் சண்முகலிங்கன், பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை, பேராசிரியர் மோகனதாசன் ஆகியோரும் பேராசிரியர்களான சிற்றம்பலம், சண்முகதாஸ் மனோன்மணி சண்முகதாஸ், கிருஸ்ணராஜா தேவராஜா, சிவச்சந்திரன் கந்தசாமி, கோபால கிருஸ்ணன் ஆகியோரும் மற்றும் கலாநிதி சனாதனன், கலாநிதி ரதிதரன், கலாநிதி பாலகைலாசநாத சர்மா நவரஞ்சனி முதலான பலரும் கலந்து கொண்டனர். அங்கு நான் பெற்ற அனுபவங்களைத் தனியாக எழுதுவேன்.